தீர்த்தம்-மூர்த்தி-தலம் முப்பெருமைகளைக் கொண்ட ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் அமாவாசை நாளில் ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து இறந்துபோன முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய திதி தர்ப்பண பூஜை செய்து பின்னர் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடிவிட்டு பின்பு சாமி தரிசனம்செய்வது வழக்கம்.
தை அமாவாசை நாளை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் பகல் முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் தலத்தின் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி, சிவ பூஜையும் தரிசனமும்செய்து, பித்ருக்கடன் செய்தாலே, நம் முந்தைய ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. ஸ்ரீராமபிரான் ராமேஸ்வரத்துக்கு வந்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவலிங்க பூஜை செய்து, பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டார் என்று தல புராணம் தெரிவிக்கிறது.
கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரம் கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டதோடு அக்னி தீர்த்தக்கடல், 22 தீர்த்தக்கடலில் புனித நீராட தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இதனால் கடந்த ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாள்களிலும் ராமேஸ்வரம் கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
ஆடி, புரட்டாசி மகாளய அமாவாசையில் வர முடியாத காரணத்தால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அளித்து கோயிலில் புனித நீராட அனுமதி வழங்கியது, இதனையடுத்து ஏராளமானோர் புனித நீராடி சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு அக்னித் தீர்த்த கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் தம் உடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடிவிட்டு பின்பு சாமி தரிசனம்செய்தனர்.
தை அமாவாசையான இன்று ராமேஸ்வரம் கோயிலில் காலை 9 மணியளவில் சுவாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனையொட்டி அதிகாலை 2.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3.30 முதல் 4.30 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனமும் தொடர்ந்து வழக்கமான பூஜையும் நடைபெற்றன. அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்படும் நடையானது பகல் முழுவதும் திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் சிரமமின்றி அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி திதி தர்ப்பணம் கொடுத்துவிட்டு கோயிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்கள், சாமி தரிசனம்செய்ய திருக்கோயில் நிர்வாகம் சார்பாக தடுப்புக் கம்புகள் அமைத்து பக்தர்கள் சிரமமின்றி தரிசனம்செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர் வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சார்பாக 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 30-க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது.