ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா பாடநூல்களை நேற்று (ஜூலை15) வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதபுரம் ஆட்சியர், 'ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 190 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 1.49 லட்சம் மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் கழகத்திடமிருந்து பெறப்பட்டுள்ள விலையில்லா பாடநூல்கள் தயார் நிலையில் உள்ளன.
முதற்கட்டமாக, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படுகின்றன. மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பில் 13,335 மாணவர்களும் (அரசுப் பள்ளிகள்: 7,571 மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்: 5,764), 12ஆம் வகுப்பில் 11,825 மாணவர்களும் (அரசுப் பள்ளிகள்: 5,200 மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்: 6,625) பயில்கின்றனர். இம்மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் அந்தந்த பள்ளிகளின் மூலமாக நேரடியாக வழங்கப்படுகின்றன.
மேலும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணினிகளில் கல்வி சார்ந்த காணொலி வகுப்புகள் பதிவேற்றம் செய்து வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் சிரமமின்றி கல்வி கற்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.