ராமநாதபுரம் மாவட்டத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் பாம்பன் ரயில் தூக்குப் பாலம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தளர்வுகளின் அடிப்படையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதியிலிருந்து சிறப்பு ரயில் ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து முதல் ரயில் ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு சென்னை சென்றது. பின் பாம்பன் ரயில் பாலத்தில் உள்ள சென்சாரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மண்டபத்தில் இருந்து ரயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
அதனை தொடர்ந்து தென்னக ரயில்வே துணை தலைமை இன்ஜினியர் தலைமையிலான குழு, பாம்பன் பாலத்தை இரண்டு நாள்கள் முன்பு ஆய்வு செய்தது. அதன்பின் ரயில் என்ஜின்கள் கொண்டுவரப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இன்று (அக். 8) 4 பேர் கொண்ட ஐஐடி குழு, ரயில்வே குழு இணைந்து ஆய்வு நடத்தியது. ரயில் என்ஜினுடன் 22 காலி பெட்டிகள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து கொண்டுவரப்பட்டு பாம்பன் பாலத்தின் தூக்கு பாலம் பகுதியில் முன்னும் பின்னும் இயக்கப்பட்டு சென்சாரின் தன்மை சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆய்வுக்குப் பின் ரயில் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க...ராமேஸ்வரம் தூக்குப் பாலத்தில் உள்ள சென்சார்கள் ஆய்வு!