ராமநாதபுரம் மாவட்டம் இளங்கோவடிகள் சேரன் தெருவில் வசித்து வருபவர் சிஎம் பாண்டியராஜன். இவர் 1943இல் மலேசியாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். அப்பொழுது இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்திருந்த நேரம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸினால் ஈர்க்கப்பட்ட பாண்டியராஜன், இந்திய தேசிய ராணுவப் படையில் சேர்ந்து பல கொரில்லா தாக்குதல்களில் பங்கேற்றுள்ளார்.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் பிரிட்டிஷ் அரசு மலேசியாவை கைப்பற்றியது. அப்பொழுது சித்ரா எனப்படும் இவரது படையில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மலேசியா, பர்மா சிறைகளில் அடைக்கப்பட்டனர், 6 மாதம் சிறைக்குப் பின் 1946 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாண்டியராஜன் விடுதலை செய்யப்பட்டார். பின்பு தனது அப்பாவின் வற்புறுத்தலின் பேரில் 1947க்கு பின் ராமநாதபுரத்துக்கு வந்து சேர்ந்தார்.
கடந்த 55 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வரும் பாண்டியராஜன், 2,000 ரூபாய் வாடகை கொடுத்து வருகிறார். இவரே தற்பொழுது இந்திய தேசிய ராணுவப் படையின் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருகிறார். 2003ஆம் ஆண்டு அரசிடம் வீடு வழங்கக்கோரி இவர் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக நகராட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பல அலுவலகங்களில் ஏறி இறங்கிவரும் பாண்டியராஜனுக்கு இன்றுவரை வீடு வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அவர், "எனக்கு வாடகைக்கு வீடு கொடுத்திருப்பவர் அதை காலி செய்யும்படி கேட்டுள்ளார். ஆனால், மற்ற பகுதிகளில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வாடகை கேட்கின்றனர். நான் சுதந்திரப் போராட்ட வீரரின் உதவித்தொகையில் வாழ்க்கையை நகர்த்தி வருகிறேன். எனக்கு மூன்று மகள்கள், இரு மகன்கள் உள்ளனர். ஆனால் அதில் ஒரே ஒரு மகள் மட்டும் சென்னையில் மின்சாரத் துறையில் பணியாற்றி வருகிறார். மற்றவர்கள் அனைவரும் நடுத்தர வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். வீடு வசதி இல்லாததால் பெருமளவு பிரச்னையை சந்தித்து வருகிறேன். இது தொடர்பாக பல மனுக்களை எழுதியும் முடிவு கிடைக்கவில்லை. சுதந்திரத்திற்காக போராடியவர்களை தற்பொழுது இருக்கும் அலுவலர்கள் அலட்சியம் செய்கின்றனர். என் உயிர் பிரிவதற்கு முன்பாக அரசு எனக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். பாண்டியராஜன் போன்று நாட்டிற்காக தன்னலமற்று செயல்பட்டவர்களுக்கு அரசு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.