ராமநாதபுரம்: கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும், அவர்களது மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவம், மீனவர்களை கைது செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இலங்கை கடற்படையின் அத்துமீறல்களைக் கண்டித்து தமிழக மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த ஒரு வார காலமாக மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், மீன்பிடிக்கச் செல்லாமல் மீனவர்கள் படகுகளை கரைகளில் நங்கூரமிட்டு நிறுத்தி இருந்தனர். இந்நிலையில், நேற்று (டிச.09) ராமேஸ்வரத்தில் இருந்து மீன்வளத்துறையிடம் உரிய அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குச் சென்ற மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை அங்கு ரோந்து கப்பல் ஒன்றில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகள் மீது மோதியுள்ளனர். இதில் பவுல் என்பவரின் விசைப்படகு சேதமடைந்துள்ளது. இதில், படகில் இருந்த ஐந்து மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் வீனவர்கள் மீன்பிடிக்காமல் படகுகளை கரை திருப்பியுள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மீன்வளத் துறையினர் மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்கள், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்களை கைது செய்து, அவர்களின் இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்ததை தொடர்ந்து, தற்போது ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையின் ரோந்து படகுகள் மோதிய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த நாடுதான் தமிழ்நாடு”- மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்