ராமநாதபுரத்தில் நேற்று தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் உள்ளாட்சித் தேர்தலின் போது எவ்வாறு பணியில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை குறித்து வருடாந்திர ஆய்வு செய்தேன். ஊரக உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரச்னைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. மேலும் கிராமங்களில் தேர்தல் பரப்புரை, வாக்குப்பதிவு நேரங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் நடைபெறாமல் இருக்க காவல் துறையினர் முன்கூட்டியே பொதுமக்களிடம் கூட்டங்கள் நடத்தி அமைதி ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீஸாரும் ஈடுபடுத்தப்படுவர். பழைய குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்படுவர்’ என்றார்.
மேலும், தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் உள்ளிட்ட காவல்துறை தொடர்பான எந்த புகாரையும் தனது 9498198199 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் ஐஜி தெரிவித்தார். அப்போது, ராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஸ் குமார் மீனா, காவல் கண்காணிப்பாளர் வீ.வருண் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.