ராமநாதபுரம் மாவட்டம் திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட திறன் பயிற்சி வகுப்பில் அனுபவமிக்க கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கும் விழா இன்று அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் விஷ்ணு வேணுகோபால் கலந்துகொண்டு இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மேற்பார்வையாளர், கொத்தனார், மின்சார பணியாளர், தச்சர், பிளம்பர், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெற்ற மொத்தம் 740 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கினர்.
விழாவில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், இந்தத் திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்ற நபர்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல வேண்டுமானால் கற்றுக்கொண்டதை நேர்த்தியான முறையிலும் புதிய வழிமுறைகள் கண்டுபிடித்தும் செய்ய வேண்டும். இதன் மூலம் அனைவரும் பயன்பெற வேண்டும் என்றும் வேலை எந்த அளவிற்கு பார்க்கிறீர்களோ அந்த அளவுக்கு ஊதியம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாகப் பேசிய விஷ்ணு வேணுகோபால், மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை சுமார் 55 ஆயிரம் பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் அரசின் அங்கீகாரம் பெற்ற பணியாளர்களான அவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரை மின் துறை சார்ந்தும், சுற்றுலாத்துறை சார்பாகவும் உள்ள பணிகளை மேற்பார்வையிட்டு அதில் இங்குள்ள இளைஞர்களை ஈடுபடுத்தி அவர்களின் திறனை மேம்படுத்தி அந்தத்துறையில் பயிற்சி வழங்கப்பட்டு பணியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் மாவட்ட ஆட்சியர் உடன் இணைந்து செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.