ராமநாதபுரம்: ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய கடல் பகுதிகளில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.
அதில் ஒரு சில மீனவர்கள் அரசின் விதிகளை மீறி சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
கடல் பகுதியில் சோதனை
இவர்களை கடலோர காவல் படை, கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு மற்றும் மீன்வளத்துறை ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து படகுகளையும், வலைகளையும் பறிமுதல் செய்கின்றனர்.
இந்நிலையில் இன்று (செப்.2) மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி தலைமையிலான மீன்வளத்துறை அலுவலர்கள், கடலோர காவல்படை, கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு ஆகியோர் கடல் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
6 டன் மீன்கள் பறிமுதல்
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த முபாரக், செய்யது ரில்வான், சிந்தூஸ் ராணி ஆகிய மூவருக்குச் செந்தமான விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், அந்த மூன்று படகுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 6 டன் எடை கொண்ட மீன்களை ஏலத்தில் விடும் நடவடிக்கையில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சுருக்குமடி வலை பிரச்னையை தீர்க்க அரசுக்கு உத்தரவு