ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பெரிய பட்டணத்தை அடுத்த 'ஆஞ்சநேய புரம்' கடல் பகுதியில் பாரம்பரிய மீன்பிடிப்பான கரைவலை மீன்பிடிப்பில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் வீசிய வலையை இழுக்கும்போது அதில் மீன்களோடு சேர்ந்து அரிய வகை சித்தாமையும் வந்தது. இது தொடர்பாக மன்னார் வளைகுடா வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர், ஆமையை பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் விட்டனர்.
சித்தாமை சிறுகுறிப்பு
இந்த ஆமை குறித்து வனக்காவலர் சதீஷ் கூறுகையில், ”சித்தாமை, அரியவகை ஆமை. தற்போது கடலில் விடப்பட்ட ஆமைக்கு 7 வயதிருக்கும். இதன் எடை 30 கிலோ. டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இவற்றின் இனப்பெருக்க காலம்.
அப்போது நமது மன்னார் வளைகுடா பகுதியில் முட்டை இடுவதற்காக இவை கரையோரங்களில் ஒதுங்கும். மீன் பிடி வலைகளில் இது போன்ற அரிய வகை ஆமைகள் சிக்கும்போது உடனடியாக வனத்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.