இலங்கை தலைமன்னாரை சேர்ந்த முஜிபுர் ரகுமான் கடந்த 1990 ஆம் ஆண்டு தனது அம்மா இஸ்துல்பீவி, அண்ணன் உமர் அலி, சித்தி பரினா ஆகியோருடன் இலங்கையிலிருந்து அகதியாக ராமேஸ்வரம் வந்து அங்குள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ளார். அதே முகாமில் தங்கியிருந்த சிவப்பிரியா என்பவரைத் திருமணமும் செய்துகொண்டுள்ளார்.
இவர்களுக்கு ஆயிஷா நிதலா என்ற 2 வயது மகள் உள்ள நிலையில் இவர் கடந்த 25.12.2019 அன்று இங்கிருந்து படகு மூலம் இலங்கை சென்றுள்ளார். அங்கு இலங்கை கடற்படையினரிடம் பிடிபட்ட இவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்து தலைமன்னாரில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு மீண்டும் படகு மூலம் தலைமன்னாரிலிருந்து புறப்பட்டு மண்டபத்தை அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரையில் வந்து இறங்கி, அங்கிருந்து நேராக மண்டபம் அகதிகள் முகாமிற்கு வந்து அங்குள்ள அவரது அண்ணன் உமர் அலி வீட்டில் ரகசியமாக தங்கியுள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற கியூ பிரிவு காவல்துறையினர் முஜிபுர் ரகுமானை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சட்ட விரோதமாக மது விற்ற இலங்கை அகதி கைது