மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசியச் சிலம்பம் அகாதெமி மற்றும் ஆசியச் சிலம்பம் அகாதெமி சார்பில் செப்.14, 15 ஆகிய தேதிகளில் சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் இந்தியா, சீனா, தாய்லாந்து உள்பட எட்டு ஆசிய நாடுகள் கலந்துகொண்டன. இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டிலிருந்து 250-க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் தீப்பந்தம் சுழற்றி கின்னஸ் சாதனை படைத்தனர். இப்போட்டியில் ராமநாதபுரம் ஹேமநாதன் சிலம்பம் பயிற்சி பள்ளியில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவி ஆர்.ரக்க்ஷா ஸ்ரீ, ஆறாம் வகுப்பு மாணவர் முகம்மது ஆதிப், 10ஆம் வகுப்பு மாணவர் எஸ். சந்திரசேகரன், எஸ். பரத் நிவாஸ், எம். சந்துரு ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
அதேபோல் 10ஆம் வகுப்பு மாணவர் பி. கிஷோர் குமார், 9ஆம் வகுப்பு மாணவர் ஆர். கவின், ஏழாம் வகுப்பு மாணவர் எஸ். சந்தோஷ் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். இப்போட்டியில் தீப்பந்தம் சுழற்றி கின்னஸ் சாதனை படைத்த சிலம்பம் பயிற்றுநர்கள் என். ஹேமநாதன், ஏ. ரூபா ஆகியோருக்கும் வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.