இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தீயணைப்பு வாகனங்கள் மூலம் அரண்மனை பகுதியில் உள்ள கடைகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், இராமநாதபுரத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த 4125 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அந்த வீடுகளில் பிரத்யேக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அரண்மனை பகுதியில் சாலையோர கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு ராஜா பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. அங்கு மக்கள் சென்று சமூக இடைவெளி கடைபிடித்து தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிச் செல்லலாம் என்று கூறினார்.
மேலும் இராமநாதபுரத்தில் இதுவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை இருந்தபோதும் மக்கள் இதை அலட்சியமாக எடுத்துக்கொண்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து ராமநாதபுரத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் 10 தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமிநாசினி நாள்தோறும் இரு முறை தெளிக்கப்படுகின்றது என்று தெரிவித்தார்