ராமநாதபுரத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் நவாஸ் கனியிடம் ஈடிவி பாரத் செய்தியாளர் சில கேள்விகளை முன் வைத்தார். அதற்கு அவர் கூறிய பதில்கள் பின்வருமாறு,
- கேள்வி- பரப்புரை எப்படி சென்று கொண்டு இருக்கின்றது?
- பதில் -எங்களின் பரப்புரை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. மக்களிடம் நாங்க செய்ய உள்ள திட்டங்கள் மற்றும் திமுக ,காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சொல்லி வாக்கு சேகரித்து வருகின்றோம்.
- கேள்வி - முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறீர்கள் களம் எப்படி இருக்கின்றது?
- பதில்-மக்கள் என்னை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். மக்கள் தேர்தலை எதிர் நோக்கியும், மாற்றத்தை கொடுக்கவும் தயாராக உள்ளனர்.
- கேள்வி - எந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக கூறி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறீர்கள்?
- பதில்-ராமநாதபுரம் நாடாளுமன்றத்தொகுதியில் உள்ள மீனவர்கள் , விவசாயிகள், நெசவாளர், போக்குவரத்து, புதிய இரயில் சேவை, மருத்துவ கல்லூரி உள்ளிட்ட பிரச்னைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன் என மக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகள் சேகரித்து வருகிறேன்.
- கேள்வி - ராமநாதபுரத்தில் ஏணிக்கும்- தாமரைக்கும் போட்டி எப்படி உள்ளது?
- பதில்- எங்களை பொறுத்தவரை போட்டி கடுமையாக இல்லை, எங்களுக்கு சாதகமாகத்தான் உள்ளது.
- கேள்வி - புதிய தொழிற்சாலை துவங்க ஏதும் திட்டம் இருக்கிறதா?
- பதில்- ராமநாதபுரத்தை பொறுத்தவரை தொழிற்சாலை ஏதும் இல்லாததால் இந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் ,திருப்பூர் ,கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வெளிநாட்டுகளுக்கும் சென்று பணி செய்கின்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்து தொழிற்சாலைகள் துவங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- கேள்வி-நவாஸ் கனி வெற்றி பெற்றால் தொகுதிக்கு வரமாட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்?
- பதில்- என்னுடைய ஊர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள குருவாடிதான். நான் இந்த மண்ணின் மைந்தன். நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் அலுவலகம் அமைத்து பணியை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.