ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியராக எஸ். பழனிக்குமார் இருந்துவருகிறார். இவர் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவராகவும் பதவியில் உள்ளார்.
இந்நிலையில் பழனிக்குமார் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் மனு வந்துள்ளதாகவும் அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துமாரி தெரிவித்துள்ளார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மாவட்ட வருவாய் அலுவலர் தூண்டுதலின் பேரிலேயே சிலர் புகார் மனு மூலம் கொடுத்துள்ளதாகவும் எனவே மாவட்ட வருவாய் அலுவலரை உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறையினர் பணிகளைப் புறக்கணித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
சங்க மாவட்டத் தலைவர் எஸ். பழனிக்குமார் தலைமையில், மாவட்டச் செயலாளர் தமீம் ராஜா, பெண் அலுவலர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்துக்கு வந்த ஆட்சியர் வீரராகவ ராவ், வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், ஆகியோர் வருவாய்த் துறையினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இதனால் வருவாய்த் துறை அலுவலர்கள், ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினர். போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய்த் துறையினர் பணிகளைப் புறக்கணித்து கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க: நாங்குநேரி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!