நாடு கரோனா ஊரடங்கின் மூன்றாவது கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ள சூழலில், திங்கள்கிழமை (ஏப்.4) முதல் தமிழ்நாட்டில் அத்தியாவசிய கடைகள், செல்ஃபோன் சர்வீஸ் நிலையங்கள் உள்ளிட்ட கடைகளைக் காலை 11 மணி முதல் மாலை ஐந்து மணிவரை திறக்கலாம் என அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், ராமநாதபுர மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதைச் சற்றும் பொருட்படுத்தாமல் மக்கள் அனைவரும் கூட்டமாகக் கடை வீதிகளுக்குச் சென்று சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொருள்களை வாங்கிச் சென்றனர்.
ராமநாதபுரம் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் அவர்களைக் கட்டுப்படுத்துவதில் காவல் துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதனிடையே, அரசு அறிவித்த அனுமதி அளித்த கடைகள் மட்டுமல்லாமல் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்ட கடைகளும் பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டிருந்தன. கடையை மூடுமாறு ஒலி பெருக்கி மூலம் காவல் துறையினர், அரசு அலுவலர்கள் தொடர்ந்து அறிந்த பிறகே இந்தக் கடைகள் மூடப்பட்டன.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொறுப்பற்ற முறையில் மக்கள் நடந்துகொண்டால் கரோனா வைரஸை எப்படி வெல்ல முடியும் என காவல் துறையினர் கவலைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, 'கை' கொடுக்கும் காங்கிரஸ்!