ராமாநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற நவாஸ் கனி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்துவருகிறார். அப்போது அவர் பத்திரிக்கையாளரை சந்தித்தார்.
அச்சந்திப்பின்போது நவாஸ் கனி கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேவையான அனைத்துத் திட்டங்களையும் பெறுவதற்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் உடன் சேர்ந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். மாவட்ட நலன்களுக்காக முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தஉள்ளேன்.
மாவட்டம் முழுவதும் நிலவிவரும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்து உரையாற்ற உள்ளேன். மீனவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ரமேஸ்வர தீவு பகுதிகளை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முக்கிய தேவையான மருத்துவக் கல்லூரிகள், விமான நிலையம், பகல் நேர ரயில் சேவைகள் மத்திய அரசிடம் வலியுறுத்தி பெறப்படும். ராமநாதபுரத்தில் வேலையின்மை குறைக்க தொழில் நிறுவனம் தொடங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
மத்திய அரசு மக்களுக்கு பயன்பெறும் திட்டங்களுக்கு அனுமதி கொடுக்காத பட்சத்தில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டேன் என்று கூறினார்.