ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கத்திடம் ஈடிவி பாரத் சார்பாகப் பிரத்யேக நேர்காணல் செய்தோம். அப்போது அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
தங்களது தேர்தல் பரப்புரை எப்படி உள்ளது, தங்களுக்கு மக்கள் ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது?
தேர்தல் அறிவித்ததிலிருந்து ராமநாதபுரம் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டுவருகிறோம். செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆரவாரத்துடன் எங்களை வரவேற்று வருங்கால முதலமைச்சர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தான். ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ நீங்கள்தான் என்றும் கூறுகின்றனர்.
தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் மணிகண்டன் எந்த விஷயங்களைச் செய்ய தவறிவிட்டதாக நீங்கள் எண்ணுகிறீர்கள்? நீங்கள் சட்டப்பேரவை உறுப்பினரானால் என்ன செய்வீர்கள்?
நான் எப்போதும் என்னை மற்றவருடன் ஒப்பிடுவது கிடையாது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு எண்ணற்றத் திட்டங்களை மு.க. ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையில் தந்துள்ளார். இந்தத் தேர்தலில் கதாநாயகன் எங்களுடைய தேர்தல் அறிக்கைதான். குறிப்பாக ராமநாதபுரம் தொகுதிக்கு பாதாள சாக்கடைத் திட்டம், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சீர்கேடு அடைந்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாவட்டம் முழுவதிலும் உள்ள நான்கு நகராட்சிகள் ஏழு பேரூராட்சிகள் 429 ஊராட்சிகளில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைச் சீரமைத்து குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்யப்படும். அடுத்தகட்டமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் ராமநாதபுரம் தொகுதியில் உள்ள மக்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் நிலை தடுக்கப்பட்டு இங்கேயே வேலைசெய்ய சூழல் ஏற்படுத்தப்படும்.
ராமநாதபுரம் தொகுதியில் உங்களுக்கு எதிராக பாஜக களம் காண்கிறது, எந்த அளவு போட்டி இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?
பாஜகவை எனக்குப் போட்டியாக நான் கருதவில்லை. என்னுடைய வெற்றி ராமநாதபுரம் தொகுதியில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. வாக்கின் எண்ணிக்கை அதிக அளவில் பெறுவதற்கான தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகிறேன்.
ஒன்பதில் என்ன செய்வேன் என்பதை ஒரு வரியில் அடக்கிக் கூறிவிட இயலாது, திமுகவின் தேர்தல் அறிக்கையில் எண்ணற்றத் திட்டங்களை ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குக் கூறியுள்ளோம்.
இதையும் படிங்க: 'மதுர பாஷைதான் இந்த விருதுக்கு காரணமே' - குழந்தை நட்சத்திரம் நாகவிஷால்