ராமநாதபுரம்: பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் தரம் பிரித்து சாலை அமைக்கும் பணிகள், சிமென்ட் உற்பத்தித் தொழிற்சாலைகளில் எரிபொருளாக உள்ளீடு செய்வது போன்றவற்றில் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
ராமேஸ்வரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. ஏறத்தாழ 12,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
பழமை வாய்ந்த புண்ணிய தலமான ராமநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. பிற மாவட்டங்களில் இருந்தும், தேசிய அளவிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய இடமாக விளங்குகிறது.
கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை
இந்நிலையில் ராமேஸ்வரம் நகரில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் குப்பைகள் மற்றும் கழிவுகள் வீடு வீடாக நேரடியாக சேகரிக்கப்பட்டு, வடகாடு பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கே, பிளாஸ்டிக் கழிவுகள், மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை மூலம் மண்புழு உரம் தயாரித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அந்தவகையில், மாவட்ட ஆட்சியர் நேற்று (ஜூன்.23) வடகாடு பகுதியில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை நிலையத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நகராட்சிப் பகுதியில் நாளொன்றுக்கு சராசரியாக 13 டன் அளவில் குப்பைக் கழிவு சேகரிக்கப்படுவதாகவும், அவற்றை முறையே திடக்கழிவு மேலாண்மை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய அறிவுரை
அதுசமயம் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் தரம் பிரித்து சாலை அமைக்கும் பணிகள், சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலைகளில் எரிபொருளாக உள்ளீடு செய்வது போன்றவற்றில் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
மேலும், நகராட்சிப் பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரை மேலாண்மை செய்வதற்காக புத்துணர்வு, நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் திட்டத்தின் கீழ், ரூ.52.60 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மேற்கொள்ளப்படுகின்றது.
இத்திட்டத்தின்கீழ், ராமேஸ்வரம் வடகாடுப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் தங்கச்சிமடத்தில் உள்ள அரசு ஆரம்ப நிலையத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் ராமர் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா தொற்று 7 ஆயிரத்துக்கு கீழ் குறைவு!