காவல் துறையினரின் பணிகள், தொழில் நுட்பம், அவர்கள் பயன்படுத்தி வரும் வாகனங்கள், உடைகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்வது வழக்கத்தில் இருந்து வருகிறது.
அந்த அடிப்படையில் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிரே அமைந்துள்ள ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களும், வாகனங்கள் உள்ளிட்ட தொழில் நுட்பங்களும் அவர்கள் பயன்படுத்தி வரும் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டன. இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் சரக டிஐஜி மயில் வாகனன், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் இருந்தனர்.
மேலும் இந்த ஆய்வில் அனைத்து காவலர்களின் விடுப்புக் காரணங்கள், தேவையான நாட்களில் விடுப்பு வழங்குவது, பணிச்சுமை நேரங்களில் மனதளவில் ஏற்படும் நெருக்கடியைக் களைதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. முன்னதாக காவலர்களின் ஆயுதப் படை அணிவகுப்பினை டி.ஐ.ஜி, எஸ்பி ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.