ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகுமார் (35). இவரது மனைவி ராணி (எ) அமுதராணி (24). இவர்களுக்கு நரேந்திரகனி என்ற மகன் உள்ளார்.
முத்துகுமார் திருட்டு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இதனால் அமுதராணி கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இறுதியாக தான் திருந்தி வாழ்வதாக கூறி அமுதராணியை முத்துகுமார் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில், மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனையடுத்து 21.02.2012 அன்று முத்துகுமார் சைக்கிளில் அமுதராணியை சந்தைக்கு அழைத்து சென்றுள்ளார். கமுதி - பெருமாள்தேவன்பட்டி செல்லும் சாலையில், சென்று கொண்டிருந்த போது முத்துகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அமுதராணியை குத்திக் கொலை செய்தார்.
இதுகுறித்து அமுதராணியின் தந்தை பூமிநாதன் கமுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துகுமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மனைவியை கொலை செய்த முத்துக்குமாருக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.