ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், இந்த நிதியாண்டில் (2020-21) 38.79 கோடி மதிப்பில் 61 கண்மாய்களின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், புனரமைப்புப் பணிகள் தொடங்குவதிலிருந்து, ஒவ்வொரு கட்டமாகப் பணி முன்னேற்றம் குறித்து வாரம் ஒருமுறை ஊர் பொதுமக்களிடையே கூட்டம் நடத்தி வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட விவசாயிகள், பாசன சங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, இப்பணிகளை மேற்கொள்ளும் போது ஒருவருக்கு ஒருவர் போதிய சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும், முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கமுதியில் உள்ள முஸ்டக்குறிச்சி கண்மாயில் நேற்று தொடங்கிய குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், "முஸ்டக்குறிச்சி கண்மாயில் ரூ.34 இலட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த கண்மாயானது 24.26 மில்லியன் கன அடி கொள்ளளவும், 118 ஹெக்டேர் ஆயக்கட்டு பரப்பளவும் கொண்டது.
இதில், 2.20 கி.மீ. கரையைப் பலப்படுத்துதல், 1.60 கி.மீ வரத்துக்கால்வாயினை தூர்வாருதல், நான்கு மதகுகளை சீரமைத்தல் போன்ற புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மழைக் காலம் தொடங்கும் முன் அனைத்துப் பணிகளும் நிறைவடையும்" என்றார்.
இதையும் படிங்க : வாரங்கல் கொலை: காதலித்த பெண்ணின் மகள் மீது மோகம்! கொலைக்கான காரணம் வெளியீடு