ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் சுற்றித்திரியும் இருசக்கர வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல்செய்து வழக்குப்பதிந்து-வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக பரமக்குடியில் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து பெட்ரோல், உதிரி பாகங்கள் திருடுபோயின.
இது குறித்து பரமக்குடி தாலுகா ஆய்வாளர் சுதந்திராதேவி விசாரணை நடத்தினார். அதில், ஊர்க்காவல் படையில் பணிபுரியும் துரைபாண்டி, தியாகராஜன், சக்தி மோகன், விக்னேஷ் ஆகிய நான்கு பேரும் 14 இருசக்கர வாகனங்களிலிருந்து ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான பெட்ரோல், உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றைத் திருடியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, பரமக்குடி காவல் ஆய்வாளர் திருமலை நான்கு பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தார். மேலும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல், உதிரி பாகங்களைத் திருடிய சம்பவம் காவல் துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பள்ளி மாணவிக்கு பாலியல் வன்புணர்வு: 7 பேர் போக்சோவில் கைது!