ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நெருஞ்சிபட்டியில் திருமணத்தில் பங்கேற்று அய்யனார்புரத்தைச் சேர்ந்த வேல்முருகன், முனீஸ்வரன் இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அதேபோல், பேரையூரில் திருமணத்தில் பங்கேற்று கொண்டுலாவி கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி, பழனி இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, கள்ளிக்குளம் செல்லும் வழியில் இரண்டு இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதின. இதில், நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக நான்கு பேரும் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர் நான்கு பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், அவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பேரையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வீட்டிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த நான்கு பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.