ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக ராபர்ட் ஜெயராஜ் என்பவர் கடந்த 2009இல் பணியாற்றினார். அதே ஆண்டு அக்டோபர் இரண்டாவது வாரம் கும்பரம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக அவரை பணியிட மாறுதல் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர், தனக்கு பதவி உயர்வு வேண்டாம் என்றும் அழகன்குளம் ஆரம்பப்பள்ளியிலேயே பணியை தொடர விரும்புவதாகவும் சுய விருப்ப கடிதத்தை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்ப்பித்தார்.
இதுதொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பூலோக சுந்தர விஜயனுக்கும் ஆசிரியர் ராபர்ட் ஜெயராஜூக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதையடுத்து இருவரும் தேவிபட்டணம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இந்நிலையில் தொடக்கப்பள்ளி அலுவலர் ராபர்ட் ஜெயராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை 2019ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், அவரின் 10 மாத பணியிடைநீக்கத்தை ரத்து செய்து, ஓம் சக்தி நகர் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியமர்த்தி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் தனக்கு வழங்க வேண்டிய 10 மாத சம்பளம், 10 ஆண்டு கால கட்டத்தில் வழங்க வேண்டிய பணி ஊக்கத் தொகை கோரி உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் தொடக்க கல்வி துறை அவரிடம் தொடர்ந்து அலட்சியாமாக நடந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தன் மீதான பழிவாங்கும் போக்கை விலக்கிக் கொண்டு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கோரி அவர் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:
நெல்லை காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கு: 4 பேர் நீதிமன்றத்தில் சரண்