ஹைதராபாத்தில் நடந்த நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ’அண்ணாத்த’ படப்பிடிப்பின்போது, அதில் பணிபுரிந்த 8 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து ரஜினிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், நல்வாய்ப்பாக அவருக்கு தொற்று பாதிக்கவில்லை. இருந்தும், ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த், சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்றும், மக்கள் மன்றம் வழக்கம் போல செயல்படும் என்றும் மூன்று பக்க அறிக்கையை இன்று அவர் வெளியிட்டார். இது அவருடைய ரசிகர்கள் இடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தாலும், ரஜினியின் உயிர்தான் தங்களுக்கு முக்கியம் என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் சலீம், ” தலைவர் எப்பொழுதும் சூப்பர் ஸ்டாராகவே இருக்க வேண்டும். கட்சியைத் தாண்டி எங்களுக்கு அவரின் உயிர்தான் முக்கியம். ஆகவே இந்த அறிவிப்பை நாங்கள் முழுமனதாக ஏற்றுக் கொள்கிறோம். நான் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி ரசிகராக இருந்து வருகிறேன். அரசியலுக்கு வருகிறேன் என்ற அவரது நிலைப்பாட்டையும் வரவேற்றேன். தற்போதைய அவரின் முடிவையும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறோம் ” என உருக்கமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரஜினி அரசியல் கட்சி தொடங்காவிட்டாலும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவார் - குருமூர்த்தி!