இனி அரசியலில் நடவடிக்கையிலும் ஈடுபடப்போவதில்லை, கட்சியும் தொடங்கப் போவதில்லை என அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் மக்களும், ரசிகர்களும் என்னை மன்னித்து விடுங்கள் என உருக்கமாக அறிக்கை வெளியிட்டு விட்டு அரசியலை விட்டு விலகியுள்ளார்.
இருப்பினும் அவருடைய ரஜினி மக்கள் மன்றத்தினர் அவ்வப்போது அவருக்கு விழா எடுத்தும் வாழ்த்துக் கூறியும் தங்களை நினைவுபடுத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்த் தம்பதியினரின் திருமண நாளை முன்னிட்டு, மாவட்டத்தில் மும்மத வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அதில், உத்தரகோசமங்கை கோயிலில் இந்து முறைப்படி வழிபாடு செய்யவும், ஏர்வாடி தர்காவில் இஸ்லாமிய முறைப்படி தொழுகை நடத்தி துவா செய்யவும், ஓரியூர் சர்ச்சில் கிறிஸ்தவ முறைப்படி வேண்டுதல் நடத்திடவும் திட்டமிட்டுள்ளனர்.
இதில் முதல் வழிபாடாக நேற்று (பிப்.18) அதிகாலையிலேயே ராமநாதபுரத்தை அடுத்த திருஉத்தரகோசமங்கையிலுள்ள சிவாலயத்திற்கு வந்த நடிகர் ரஜினியின் மூத்த சகோதரர் 'சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்' பத்தாயிரம் தீபவழிபாட்டையும் லட்சார்ச்சனையும் தொடங்கி வைத்தார்.
இதற்காக மாவட்டத்திற்கு வந்த அவருக்கு, ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஜினி அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டேன் என்று கூறிவிட்டாலும் கூட அவருடைய மூத்த சகோதரர் அவ்வப்போது ரஜினி மக்கள் மன்றத்தை சந்தித்தும் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.