ராமநாதபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோ. பாலகிருஷ்ணனின் வெண்கல உருவச்சிலையை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் திறந்துவைத்தார். விழாவில் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய தொல் திருமாவளவன், "ஜனநாயகத்தைக் காக்கின்ற கடமையும் ஆற்றலும் உடைய ஒரே கட்சி காங்கிரஸ் இயக்கம். மதவாத, வகுப்புவாத சக்திகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்ற காங்கிரசால் மட்டுமே முடியும். இந்தக் கட்சி வலுவிழக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் தனியாகக் கட்சி அமைத்து மாநில அளவில் மிக பலமுடன் இருப்பதால் காங்கிரசுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன், "திமுக-காங்கிரஸ் கூட்டணிக்காக மட்டுமே மக்கள் வாக்களித்தனர். வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்கவில்லை. சிறிதளவு செலவு செய்த கார்த்திக் சிதம்பரம் சிவகங்கையில் வெற்றிபெற்றார். செலவே செய்யாமல் திருச்சியில் திருநாவுக்கரசர் வெற்றிபெற்றார்" எனத் தெரிவித்தார்.
பரமக்குடி இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு திமுகவின் உள்கட்சி பூசல்தான் காரணம் எனவும் ராஜ கண்ணப்பன் பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார்.
மேலும், '2009இல் நடைபெற்ற சிவகங்கை மக்களவைத் தேர்தலில் யார் வெற்றிபெற்றார் என்பது அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்?' என சிதம்பரத்தை மேடையின் வைத்துக்கொண்டே ராஜ கண்ணப்பன் பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற சிவகங்கை மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன் வெற்றிபெற்றதாகவும், ஆனால், கடைசி நேரத்தில் ப. சிதம்பரம் தனது லாபி அரசியலால், தான் வெற்றிபெற்றதாக தேர்தல் அலுவலர்களைக் கொண்டு அறிவிக்கவைத்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதனடிப்படையில்தான் ராஜ கண்ணப்பன் அவ்வாறு பேசியிருப்பார் என கூட்டத்திற்கு வந்தவர்களில் சிலர் முணுமுணுத்துக் கொண்டே சென்றனர்.