நாடெங்கிலும் ஊரடங்கு அமலில் உள்ளதால், அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இதை பயன்படுத்தி சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பண்டைய கால முறையில் தண்டோரா மூலம் இன்று கிராமங்கள் தோறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களுக்கு உட்பட்ட ஒரு சில கிராமங்களில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டது. தற்போதுள்ள சூழலில், மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி யாரும் சாராயம் காய்ச்சக் கூடாது, விற்பனை செய்யக் கூடாது என்ற அடிப்படையில், அப்பகுதியில் உள்ள கிராமங்கள் தோறும் வீதி வீதியாகச் சென்று பண்டைய கால முறைப்படி தண்டோரா அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அறிவிப்பு செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த பகுதி கிராமப்புறங்களில் அனைவருடைய கவனத்திற்கும் இந்த தகவல் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.