ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் பாலு என்பவர் மண்டல மாணிக்கம் பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவரது தாய் ராணியம்மாள் கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு, பாலு மற்றும் அவரது தந்தை தர்மலிஙகம் ஆகியோரது வீடுகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கட்டுக்கட்டாக பணம், மது பாட்டில்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து எஸ்.பி பிறப்பித்த உத்தரவின் பேரில், காவல் துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் அவர் இல்லத்தில் சோதனை செய்தனர். அப்போது பாலுவின் வீட்டிலிருந்து ரூ. 38 லட்சம் ரொக்கம் மற்றும் 1,192 மது பாட்டில்கள் உள்ளிட்டவற்றை கமுதி காவல் துறையினர், தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட குற்றச் சம்பவங்கள், புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க 948991744 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணை காவல் கண்காணிப்பாளர் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், அந்த எண்ணிற்கு வந்த தகவலின் அடிப்படையிலேயே இந்த ரெய்டு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏடிஎம் கார்டு மூலமாக வாக்காளர்களுக்குப் பணப் பரிமாற்றம்