ராமநாதபுரம் மாவட்டத்தில் 2019, 2020, 2021ஆம் ஆண்டுகளில் 311 செல்போன்கள் திருடுபோனதாகவும், காணாமல்போனதாகவும் பொதுமக்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர். அந்தப் புகார்களின் அடிப்படையில் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் காணாமல்போன செல்போன்களைக் கண்டுபிடிப்பதற்கான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தனிப்படைகளை அமைத்திருந்தார். அந்தத் தனிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி 110 செல்போன்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த செல்போன்கள் அனைத்தையும் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று (செப். 30) காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
செல்போன் விற்பனை நிலையங்களுக்கு அறிவுரை
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திக், “ராமநாதபுரம் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி 110 விலை உயர்ந்த செல்போன்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
செல்போன் விற்பனை நிலையங்களில் பழைய செல்போன்களை விலைக்கு வாங்கும்போது அந்த செல்போன்கள் அவர்களுடையதானா என்பதை அறிந்து அவர்களது ஆதார் எண் பெற்றுக்கொண்டு பழைய செல்போன்களை வாங்கவோ விற்கவோ செய்ய வேண்டுமென்று செல்போன் விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்டா கத்தி முனையில் 20 செல்போன்கள் திருட்டு