தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸுக்கு எதிராக முன்களப் பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு அலுவலர்கள் என பலர் இந்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் பலர் கரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி மீண்டும் வந்தனர். ஆனால் ஜூன் 17 ஆம் தேதி மாம்பலம் ஆய்வாளர் பாலமுரளி காரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் கரோனா தொற்று காரணமாக இறந்த முதல் காவலர் ஆவார்.
தமிழ்நாடு அரசு சார்பாக பாலமுரளியின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்தது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அலுவலர்கள், காவலர்கள் சார்பாக 2 லட்சத்து 35 ஆயிரத்து 250 ரூபாய் குடும்பநல நிதியை இறந்த காவல் ஆய்வாளர் பாலமுரளியின் குடும்பத்திடம் பார்த்திபனூர் சார்பு ஆய்வாளர் சாரதா நேரில் சென்று வழங்கினார்.