கரோனா வைரஸ் எதிரொலியால் +2 கடைசித் தேர்வு நடக்குமா நடக்காதா என்ற இழுபறியில் நீடித்திருந்த நிலையில், இன்று நடைபெறும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.
இதனையடுத்து இன்று ராமநாதபுரத்தில் உள்ள ராமநாதபுரம், மண்டபம், பரமக்குடி ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள 58 தேர்வு மையங்களில் 14,765 மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதினர். இன்று வேதியல், கணிதவியல், புவியியல் ஆகிய தேர்வுகள் நடைபெற்றன.
மேலும், கரோனா வைரஸ் அச்சம் காரணமாக, மாணவர்கள் தேர்வு அறைக்குச் செல்வதற்கு முன்பாக, அனைவரும் கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை நன்குக் கழுவிய பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பின்னர், தேர்வு முடித்து வெளியே வந்த மாணவர்கள் கூட்டம் கூட்டமாகச் சேராமல் இருக்க வேண்டும் என்று காவல் துறையினர் வாகனங்கள் மூலமாகத் தேர்வு மையங்களுக்கு வெளியே நின்று தொடர்ந்து அறிவிப்பு வழங்கினர். இதனால் மாணவர்கள் தேர்வு முடிந்ததும், எவ்விதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபடாமல் அமைதியான முறையில் அந்தந்த தேர்வு மையங்களில் இருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: ’பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்தம் விரைவில் புதுப்பிக்கப்படும்’ - பொள்ளாச்சி ஜெயராமன்