உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ள கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ள நிலையில், 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் கரோனா வைரஸூக்கு முதலாவதாக உயிரிழந்தார். தற்பொழுது வரை தமிழ்நாட்டில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், கரோனா வைரஸ் சமூக பரவலாக மாறுவதை தடுக்க தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. தொடர்ந்து, நேற்று (மார்ச் 24) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களை தொலைக்காட்சிகள் வாயிலாக சந்தித்த பிரதமர் மோடி, ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைப்பிடிக்கப்பட உள்ளது எனவும், இந்த காலங்களில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கரோனா வைரஸ் பரவுவதற்கான சங்கிலித் தொடரை துண்டிக்க பொதுமக்கள் வீட்டில் இருப்பதே உகந்தது. எனவே, மக்கள் அதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் பெரும்பான்மையான காய்கறி, மீன் மார்க்கெட், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் முந்தியடித்துக் கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். இது கரோனா வைரஸ் சமூகப் பரவுவலுக்கான அபாயத்தை ஏற்படுத்தும் என அலுவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
மக்களிடையே கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரசு பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த் துறையினர், தூய்மை பணியாளர்கள் என அனைத்து அரசு ஊழியர்களும் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்களின் இந்த அலட்சியம் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: வழக்கறிஞர்களின் குடும்பம் பட்டினி சாவை சந்திக்கும் - பிரதமருக்கு கடிதம்