ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 167 மீனவர்கள் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால், மங்களூருவில் இருந்து சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த மீனவர்களை மீட்ட அரசு, அவர்களை தனிமைப்படுத்தி தங்க வைப்பதற்காக கமுதியில் உள்ள பெண்கள் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஆனால், கரோன வைரஸ் பரவிவிடும் என்ற பீதியில் அவர்களை அங்கு தங்க வைக்கக் கூடாது என பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். மங்களூருவில் இருந்து வந்த மீனவர்கள் மற்றும் பேருந்து சென்றால்தான் கூட்டத்தை கலைப்போம் என பொது மக்கள் காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், கமுதி தாசில்தார் செண்பக லதா, கமுதி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அந்த மீனவர்களும் அவர்கள் வந்த வாகனங்களும் அங்கிருந்து செல்லவேண்டும் அப்போது தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று அப்பகுதி மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, பரமக்குடி அருகே உள்ள பொறியியல் கல்லூரிக்கு மீனவர்களை கொண்டுச் செல்வதாக அறிவித்ததை தொடர்ந்து பொது மக்கள் கலைந்துச் சென்றனர். தற்போது அவர்கள் முதுகுளத்தூரில் உள்ள கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே நாளில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மூவர் உயிரிழப்பு