ராமநாதபுரம் பசும்பொன் தேவர் குருபூஜை விழாவிற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலக அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெறுகிறது. விழாவிற்கு வெளி மாவட்டங்களில் வந்து செல்லும் வாகனங்களுக்கு வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம், வழியாகச் செல்லவேண்டும். வாகனங்கள் கிழக்கு கடற்கரைச் சாலை பயன்படுத்தக்கூடாது.
சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகபட்டினம், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை, மானாமதுரை, கமுதி வழியாகவும் திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் திண்டுக்கல், மதுரை, வழியாக பசும்பொன் செல்லலாம்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி,மண்டபசாலை, வழியாகப் பசும்பொன் செல்லலாம். ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் பட்டினம்காத்தான் ஈசிஆர், பேராவூர் சந்திப்பு, பைபாஸ் சத்திரகுடி, பரமக்குடி, பார்த்திபனூர் வழியாக பசும்பொன் செல்லலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
வாகனங்கள் அனைத்தும் ஒதுக்கப்பட்ட வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு வழித்தடங்களில் செல்லக்கூடாது என்றும் அப்படிச் சென்றால் அனுமதிக்கப்படமாட்டாது என்று அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.