உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போதுவரை பள்ளிகள் இயங்கவில்லை. மாணவர்கள் அனைவரும் இணையவழிக் கல்வி மூலமாக கல்வி கற்று வருகின்றனர்.
இதையடுத்து வருகிற 16ஆம் தேதி முதல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள், பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு மூலமாக பள்ளிகளில் பெற்றோர்களிடம், இது குறித்து கருத்து கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று கருத்து கேட்பு கூட்டம் மாவட்டங்களில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் உள்ள 271 மேல்நிலை உயர்நிலை தனியார், அரசு பள்ளிகளில் பயிலும் 64 ஆயிரத்து 390 மாணவர்களின் பெற்றோர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு வந்து பள்ளி திறப்பது குறித்து தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து உத்திரகோஷமங்கையை பகுதியைச் சேர்ந்த பெற்றோர் லட்சுமணன் கூறுகையில், “தமிழ்நாடு அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். மாநில அரசு முறையாக வகுப்பில் 20 மாணவர்கள் என்ற வீதமும்,மாணவர்களுக்கென்று பேருந்துகள் தனியாக இயக்கினால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராக இருக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க...நில அபகரிப்பு செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்: தந்தை கண்முன்னே ஓட ஓட வெட்டிக் கொலை!