ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சாயல்குடி, முதுகுளத்தூர் முஷ்டகுறிச்சி, பெருமாள்குடும்பன்பட்டி, கே. நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன.
நேற்று (மே. 4) கே. நெடுங்குளம் கிராமத்தில் மிக குறைந்த விலைக்கு செங்கல் சூளைகளுக்காக 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டப்பட்டு, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கொண்டுசெல்ல லாரியில் ஏற்றப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தமிழர் கட்சி, கமுதி ஒன்றிய நிர்வாகிகளான மாரிமுத்து, செல்வம் ஆகியோர் விவசாயிகளிடம் சென்று பனை மரத்தின் அவசியம் குறித்தும், பனை மரம் வாங்க வந்த வியாரிகளிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதனையும் மீறி வியாபாரிகள் லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொலைபேசியில் கமுதி வட்டாட்சியர் மாதவனிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "பனை மரங்களின் முக்கியத்துவம் கருதி பனை மரங்களை வெட்டுவது சட்டப்படி குற்றமாக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் கமுதி பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதை அரசு அலுவலர்களை அனுமதிக்கக்கூடாதென வலியுறுத்தியும், பனை மரங்களை வெட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் பல முறை வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் இசையரசன் பனை மரங்கள் தொடர்ந்து வெட்டபட்டதை கண்டித்து கமுதி வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் இதனை கண்டித்து போராட்ட வடிவினை முன்னெடுக்க இருக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா பீதி: இலங்கைக்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் திருப்பி அனுப்பி வைப்பு