இராமநாதபுரம்: பரமக்குடியில் திருமண நிகழ்ச்சியொன்றில் திமுக தேர்தல் பணிக்குழு இணைத் தலைவர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசுகையில், "சசிகலா விடுதலை ஆனதோ, ஜெயலலிதா நினைவிடம் திறந்ததிலோ எந்தவொரு அரசியல் முக்கியத்துவம் இல்லை. தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என அதிமுக அமைச்சர்களும், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் பேசி வருகின்றனர்.
திமுகவிற்கு 54 விழுக்காடு வாக்கு வங்கியும், அதிமுகவிற்கு 33 விழுக்காடு வாக்கு வங்கியும் உள்ளது. அதிமுகவை விட திமுகவிற்கு 25 விழுக்காடு கூடுதலாக வாக்கு வங்கி உள்ளது. ஒரு தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் உள்ளது என்றால், அதில் 40 ஆயிரம் வாக்குகள் அதிமுகவைவிட திமுகவுக்கு அதிகமாக உள்ளது.
எனவே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதை யாரும் தடுக்க முடியாது. பணப் பலத்தால் யாரும் ஜெயிக்க முடியாது. திமுக கூட்டணி வலுவாக உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் திமுக போட்டியிட்டு அமோக வெற்றி பெறும்" என்றார்.
இதையும் படிங்க: மீனவர்களை வெறுப்பேற்றிய இலங்கை அமைச்சரின் பேச்சு