ராமநாதபுரம் வசந்த நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அருண் பிரகாஷ், யோகேஸ்வரன். இவர்கள் மீது கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் அருண் பிரகாஷ் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக கேணிக்கரை காவல் துறையினர் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஏழு பேர் நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர்.
இந்த நிலையில் உயிரிழந்த அருண் பிரகாஷின் குடும்பத்திற்கு பாஜக தேசிய செயலர் எச்.ராஜா நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''ராமநாதபுரத்தில் இந்து அமைப்பில் உள்ளவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதுபற்றி காவல் துறையினர் முறையான விசாரணையை தற்போது வரை மேற்கொள்ளவில்லை.
படுகொலை செய்யப்பட்ட அருண் பிரகாஷ் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி ஷேக் என்ற லெப்ட் ஷேக், களியக்காவிளையில் கொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தொடர்புடையவர். இந்த வழக்கில் உடனடியாக குற்றவாளிகள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். காவல்துறையால் விசாரணை நடத்த முடியாத பட்சத்தில் இந்த வழக்கை என்ஐஏ-வுக்கு மாற்ற வேண்டும்.
ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா தலைமையில் பயங்கரவாத கும்பல் இங்கு செயல்படுகிறது. இந்தோனேசியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இங்குவந்து மசூதிகளில் பரப்புரை செய்தவர்கள் கைதுக்கு எதிராக அவர்களை விடுதலை செய்ய ஆதரவாக செயல்பட்டவர் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி. அவரை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் மன உளைச்சலால் தந்தை - மகள் தற்கொலை!