ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து 11 பேருந்துகளில் 310 உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதன்பின்னர் அங்கிருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில் மூலம், சொந்த ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டனர். இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது; 'புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் மூலமாக ராமநாதபுரத்தில் பணிசெய்யும் வெளிமாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 977 வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல் பிகாரைச் சேர்ந்த 456 பேர் சிறப்பு ரயில் மூலம் சென்ற வாரம் அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜார்க்கண்டைச் சேர்ந்த 177 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று(மே 27) உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 310 பேர் தமிழ்நாடு அரசுப் பேருந்து மூலமாக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து உத்தரப்பிரதேசம் செல்லும் சிறப்பு ரயில் மூலம், அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். மேலும் பல்வேறு மாநிலங்களிலிருந்து ராமநாதபுரத்திற்கு வந்த 1400க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்’ எனக் கூறினார்.
மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அனைத்து வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை, தேவையான உணவுப்பொருட்கள் அரசு சார்பாக வழங்கப்பட்டது.