தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு குறித்து கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ஏடிஜிபி வன்னியபெருமாள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கடலோரப் பகுதிகளுக்கு சென்று கடலோர பாதுகாப்பு அதிகாரிகளிடம் பாதுகாப்பை உறுதி செய்தார். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், வேளாங்கண்ணி, வேதாரண்யம், நாகப்பட்டினம், ராமேஸ்வரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கூட்டு ரோந்து பணிகள் மூலம் கடல் மார்க்க குற்றங்களைத் தடுக்கும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதிகளில் ஊடுருவலை தடுக்கும் வகையில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் கடலோர காவல்படை உள்ளூர் போலீசார், குற்றப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கூட்டு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடலோர பகுதிகளில் இலங்கைக்கு கடத்தல் சம்பவங்கள் தொடராமல் இருக்க பாதுகாப்பு அதிகரித்து இருப்பதாகவும், அரசாங்கத்தின் சார்பில் படகுகள் பழுது பார்க்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.