பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று இரவு மாவட்டப் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்ததை அடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய் உதவிடன் பாம்பன் பாலத்திலும் ரயில் பாலத்திலும் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், முன்னாள் ராணுவ வீரர் சுந்தர மூர்த்தி என்பவர், தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் பெங்களூர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். இந்தத் தகவல் தமிழக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீஸார் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தினர்.
இந்நிலையில், ராமநாதபுரம் முழுவதும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் ரயில் நிலையம், பாம்பன் பாலத்தில் மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜெகநாதன் தலைமையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் பாலம் முழுவதிலும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். மேலும் பாலத்தின் இருபுறத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து ஆணையர் ஜெகநாதனிடம் பேசியபோது "ரயில்வே பாதுகாப்பு படை தவிர அதிரடிப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக ராமேஸ்வரம், ராமநாதபுரம், பாம்பன் ஆகிய இடங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அடுத்த தகவல் வரும்வரை பாதுகாப்பு பணி தொடரும் எனவும் கூறினார்.