ராமநாதபுரம்: உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களும் கோயிலில் சாமி தரிசனம் செய்ய தடை விதித்துள்ளது.
கோயிலில் குவிந்த பக்தர்கள்
இதையடுத்து மூன்று நாட்களுக்குப் பின் இன்று (ஆக.30) கோயில் திறக்கப்பட்டதாலும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை என்பதாலும் வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் திரண்டனர். அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
அங்கு வந்த வெளிமாநில பக்தர்கள் ஒன்றுகூடி பாரம்பரிய நடனம் ஆடி கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வரும் நிலையில் தற்போது அக்னி தீர்த்தக்கரையில் பொதுமக்கள் தகுந்த இடைவெளி, முகக்கவசம் இன்றி வருவதால் தொற்று அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்காக கட்டப்பட்ட விடுதிக் கட்டடங்களை திறந்துவைத்த ஸ்டாலின்