பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் ராமநாதபுரத்தில் திருக்குறள் மாநாட்டை நடத்தினர். இதில், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டார். இந்நிகழ்விற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, தமிழ்நாட்டில் காலூன்ற நினைப்பவர்களின் குரலாக இருக்கிறார்.
அவருக்கு யாரோ தவறான கருத்துகளைச் சொல்லி பேசச் சொல்லியிருக்கிறார்கள். அவதூறான கருத்தைப் பேசிய ரஜினியை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் பேசிய கருத்தை திரும்ப பெறவேண்டும். அதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ் மன்னர்கள் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும்.
அதனை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தவிருக்கிறோம். தமிழ் அல்லாது சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த முனைவது தமிழரின் தன்மானத்தை, மொழி உணர்ச்சியை அவமதிக்கின்ற செயலாகும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தும்வரை ஓயமாட்டேன் - பெ மணியரசன்