ராமநாதபுரம்: மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் திருவிழாக்கள், தலைவர்களின் நினைவு நாள், பிறந்தநாள் விழா உள்ளிட்ட விழாக்களின் போது கபடி போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த சூழ்நிலையில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி முதுகுளத்தூர் அருகே நடந்த கபடி போட்டியில் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு இருகிராம மக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இதன் காரணமாக 400 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்று பல்வேறு கிராமங்களிலும் நடந்த கபடி போட்டிகளிலும் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு , வழக்குகள் அந்தந்த காவல் நிலையங்களில் விசாரணையில் உள்ளது.
ஆகவே இனி வரும் விழாக்களில் இது போன்ற பிரச்சனைகள் அங்கு பிரதிபலிக்காமல் இருக்க அனுமதி வழங்கக் கூடாது, என அந்தந்த சரக அலுவலர்களுக்கும், காவல் நிலையங்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில்,"இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் திருவிழா, நினைவுநாள், மற்றும் தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்படும் கபடி போட்டிகளில் ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
மேற்படி கபடி போட்டிகளில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொள்வதால்,ஏதேனும் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், சமுதாய ரீதியிலான பிரச்சினைகளாக மாறி, எதிர்வரும் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சிகளில் பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாலும், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியும்,
இனிவரும் காலங்களில் அனைத்து காவல் நிலைய சரகங்களிலும் கபடி போட்டி நடத்த அனுமதி வழங்க கூடாது என அனைத்து உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கபடி போட்டியில் தகராறு - இரு கிராமத்தினர் இடையே மோதல்