தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை இரண்டு மாதங்களுக்கு விசைப்படகுகள், இழுவைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம்
அதன்படி தமிழ்நாட்டில் ராமநாதபுரம் உள்பட தமிழ்நாட்டின் 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மீனவர்கள் ஏப்ரல் 15ஆம் தேதியிலிருந்து கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில் ஜூன் 14 மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைகின்ற நிலையில், இன்று (ஜூன் 14) ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மீனவ பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் மீனவ பிரதிநிதி தேவதாஸ் தலைமையில் நடைபெற்றது.
டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து ஜூன் 16 ஆர்ப்பாட்டம்
இக்கூட்டத்தில் கரோனா பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளி அவசியம் என்பதால் கரோனோ தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஜூன் 29 வரையிலும் கடலுக்கு செல்லப்போவதில்லை என்றும், டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து ஜூன் 16 புதன்கிழமையன்று ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றினர்.