ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் செட்டி ஊரணியை காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெ.ரமேஷ் பாபு, ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க அமைப்பின் சார்பில், தனது சொந்த ஏற்பாட்டில் தூர்வாரியுள்ளார். இந்த, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார்.
பின்பு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம் வருத்தப்படக்கூடியது. இதன் மூலம் சுயேட்சையான பல அமைப்புகளில் உள்ளவர்கள், அதிகாரிகள் பதவியை ராஜினமா செய்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மரபுகளுக்கு மாறாக மாற்றப்பட்டார். இதனால் அவர் ராஜினமா செய்துள்ளார் என கூறினார்.
மேலும், பாஜகவின் 100 நாள் ஆட்சியில் பரிதாபகரமாக பொருளாதாரம், நிதித்துறை, தொழில்துறை, வேலைவாய்ப்புத்துறை, உள்ளிட்ட துறைகள் சென்று கொண்டிருக்கின்றன. மூன்றரை லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோகியுள்ளன. நாட்டின் ஜிடிபி 9 சதவீதமாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆனால், தற்போது அது 4 சதவீதமாக குறைந்துள்ளது.
வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கிச் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. படித்த பல கோடி பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காததால் நமக்கு கிடைக்காது என இளைஞர்கள் கல்லூரியில் சேர்வதை நிறுத்தி வருகின்றனர். இது அனைத்தும் தேசத்தை நோக்கி இருக்கும் இடர்ப்பாடுகள் என கூறினார்.