இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சமதே மங்களநாயகி கோயில் ஆருத்ரா தரிசன விழா வரும் டிச 29 , 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்நிலையில், வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனத்தின்போது ஒற்றை கல்லால் ஆன பச்சை மரகத நடராஜர் சிலையில் பூசப்பட்ட சந்தனம் களைதலும், புதிய சந்தன காப்பு பூசும் நிகழ்வும் நடைபெறும்.
இந்த அபூர்வ நிகழ்வுடன் மரகத நடராஜரை தரிசிக்க தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள் வருவார்கள். மரகத நடராஜர் மீது பூசப்பட்ட சந்தனத்தை பெற ஆர்வம் காட்டுவர்.
தற்போது கரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், வெளியூர் பக்தர்கள் வர தடை விதித்தும், உள்ளூர் பக்தர்கள் 200 பேருக்கு மிகாமல் தகுந்த இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கோயிலுக்குள் அன்னதானம் வழங்க கூடாது, தொடர் சுகாதார பணிகள் மேற்கொள்ளவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க...3ஆவது முறையும் ஆட்சி அமைப்போம்: ஈபிஎஸ்-ஓபிஎஸ் உறுதி ஏற்பு