ராமநாதபுரம்: ‘ஓபிஸ் வேண்டாம், ஈபிஎஸ் வேண்டாம் தங்க கவசத்தின் சாவி தன்னிடம் உள்ளது. வங்கியில் இருக்கும் தங்கக்கவசத்தை பெற்று, தேவர் சிலைக்கு வைக்க உள்ளேன்’ என தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் 28, 29, 30 ஆகிய தினங்களில் கொண்டாடப்படவுள்ளது. அதிமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத்தேவர் தங்கக் கவசத்தை உரிமை கோருவதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் இடையே மாறி மாறி தங்களுக்குள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு அமைச்சர்களும்; ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பு ஆதரவு மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், முன்னாள் மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், பசும்பொன் கிராமிய தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் ஆகியோரும் வங்கி அலுவலர்களை சந்தித்து கடிதம் அளித்து உரிமை கோரினர்.
இந்நிலையில் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் அதிமுகவினர் இடையே ஏற்படும் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தங்க கவசம் வங்கியின் லாக்கர் சாவி தன்னிடம் உள்ளதாகவும், ஓபிஎஸ் வேண்டாம், ஈபிஎஸ் வேண்டாம் தானே வங்கிக்குச்சென்று தங்க கவசத்தைப்பெற்று தேவர் ஜெயந்தி விழாவில் ஒப்படைக்கவுள்ளதாகப் பேட்டியளித்துள்ளார்.
இதையும் படிங்க: தேவர் ஜெயந்தி குருபூஜைக்கு தமிழ்நாடு வருகிறாரா பிரதமர்?