பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் 63-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன், இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்றி தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்ற அரசாணையை அரசு தற்போது வரை அறிவிக்கவில்லை என்பது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.
அதை அறிவிக்க வேண்டுமென்று நீண்ட நாட்களாக கருஞ்சட்டை போராட்டம் நடத்தி வருகிறோம். தீர்வு கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும்.
அதேசமயம் எந்தக் கட்சி வருகின்ற தேர்தலில் ஏழு உட்பிரிவுகள் கொண்ட தேவேந்திர குல வேளாளர் என்ற அறிவிப்பை அறிவிப்பதாக உறுதி அளிக்கிறதோ அந்த கட்சியுடன் கூட்டணி வைப்போம்” என்றார்.